காட்டுமன்னார்கோயில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது

Tuesday, December 20, 2011  at 8:15 PM;
காட்டுமன்னார்கோவிலில் நீதிபதியின் நடவடிக்கையால் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.காட்டுமன்னார்கோவில் பேரூராட்சிக்குட்பட்ட கடைவீதி, கச்சேரிரோடு, செட்டித்தெரு, ரெட்டியார்ரோடு, பஸ் நிலையம் செல்லும் சாலை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் சாலையோரக் கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருந்து வருவதால் மிகுந்த போக்குவரத்து நெருக்கடி உள்ளது.
இது குறித்து பத்திரிகைகளில் வந்த செய்தியை அடுத்து, காட்டுமன்னார்கோவில் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி ராஜ்மோகன் வழக்காக பதிவு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு வட்டாட்சியர் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் நோட்டீஸ் அனுப்பினார்.ஆனால் இது குறித்து இருவரும் நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்ற அவமதிப்பாக கருதி நீதிபதி ராஜ்மோகன் கடலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் பிறப்பித்துள்ளார்.இதை அடுத்து மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி உத்தரவின்பேரில் காட்டுமன்னார்கோவில் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது. 
கடைத் தெருவில் சில வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.மேலும் பொக்லைன் வரவழைக்கப்பட்டு நிரந்தர ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள மெட்ரிக் பள்ளிகளில் கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிப்பது குறித்து ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க இதே நீதிபதி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு நோட்டீல் அனுப்பியது.
நன்றி:தினமணி
நீதிபதி ராஜ்மோகன் அவர்களின் பணி தொடர வாழ்த்துக்கள். 

0 comments:

Post a Comment