நானும், தென்தமிழ் நாடும்

Wednesday, 10 February 2010  at February 10, 2010;
தென்தமிழ் நாட்டின் வட்டார மொழி கேட்டிருக்கிறார்களா? தென்மாவட்ட இயக்குனர்களி்ன் தயவில் சில திரைபடங்களில் கேட்டிருக்கலாம். ஆனால் முழுக்க முழுக்க அந்த மக்களின் வாழ்வை அவர்களின் வட்டார மொழிலேயே பதிவு செய்வது சிறப்பக்குறியது. அதைதான் வைரமுத்து தன்னுடைய கருவாச்சி காவியம், கள்ளிக்காட்டு இதிகாசம் என்று படைத்திருக்கிறார். கருவாச்சி காவியம் 2006 ல் வெளிவந்த போதும் அதை இப்பொழுதுதான் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது
நான் கீழக்கரையில் படித்ததால் ராமநாதபுரம் எனக்கு கொஞ்சம் பரிச்சயம். அவர்களின் வாழ்க்கை ஒன்று கடலை நம்பியிக்கும் அல்லது கடல் தாண்டிய வணிகத்தை நம்பியிருக்கும். அவர்களின் வெகுளித்தனமான பேச்சும், உண்மையான அன்பும் என்னை அவர்களை நேசிக்க வைத்தது. காட்டுமன்னார்குடியில் இருந்து கீழக்கரை செல்ல காலை 3.30 மணிக்கு கும்பகோணம் வண்டியை பிடித்தால் மதியம் 3 அல்லது 4 மணிக்கு செல்லும் 12 மணிநேர பயணம் என்னை வாழ்கையின் அடுத்த பக்கத்தை காட்டியது. புதுக்கோட்டை, காரைக்குடி,தேவகோட்டை, திருவாடனை, RS மங்களம், CK மங்களம், ராமநாதபுரம்,கீழக்கரை என்ற இந்த பாதை ஆறும், வயலும் இல்லாத பாதை. காரைக்குடி தாண்டி சுடும் மண்ணும், பனைமர ஓலைகளால் கட்டிய வேலிகளும், ஆங்காங்கே நிற்கும் பனைமரங்களும் புதிதாய் அவ்வூருக்கு செல்பவருக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும்.
நமது பயண அனுபவம் வைரமுத்துக்கு வாழ்க்கை அனுபவம். அரசர்களுக்கும், பெருங்குடி மக்களுக்கும்தான் காவியமா? மண்ணின் மைந்தர்களின் எல்லார் வாழ்க்கையும் காவியமே என்று ஆரம்பிக்கும் வைரமுத்து. கள்ளிக்காட்டை உருவாக்கி, பெரியமூக்கியையும், கருவாச்சியையும் வாழ வைத்து அதற்கு திரைகதை எழுதியிருக்கிறார். அவருடைய முந்தைய கள்ளிக்காட்டு இதிகாசத்தை 4 முறை வாசித்தவன் நான். பேயத்தேவர், மொக்கராசு, சின்னு என்ற அந்த படைப்பின் கதாபாத்திரங்களை இன்னும் என்னால்
நினைவு கூற முடிகிறது. ஒரு அணையின் கட்டுமானம் ஒரு கிராமத்து வாழ்வின் ஆணிவேரையே பிடுங்கி எறிந்துவிடும் என்றவர் இதில் ஒரு ஆதவற்ற பெண்ணின் லட்சிய பாதையையும் அதில் எப்படி அவள் வெற்றி பெற்றாள் என்பதையும் உணர்த்திருக்கிறார்.
நம்முடைய ஒவ்வொருவரின் வாழ்வுமே இதிகாசமும், காவியமும்தான். நாம் பிறக்கையிலேயே பல கோடி உயிருணுக்களை முந்தி வந்தோம். அன்றைய வெற்றி பயணம் முயல் வேகத்தில் இருந்தது. இப்பொழுது ஆமை வேகத்தில் இருக்கிறது வித்தியாசம் அவ்வளவே. ஆனால் இயங்குதல் இருக்கிறது. பிறப்பின் காரணம் தேடுதலே காவியம் படைக்கும். வாழ்வின் சந்துபொந்துகளில் சென்று செல்வம் தேடுங்கள். அதுவே அதற்கு வழியை காட்டும். ஓடிக்கொண்டே இருப்போம் இப்பொழுது அது TrendMill மீதாகவே இருக்கலாம் ஆனால் காலம் மாறும் அன்று நம் வாழ்கை எஸ்கலேட்டராக இருக்கும்.

1 comment:

துபாய் ராஜா said...

நல்லதொரு பகிர்வு.

Post a Comment