ஆண்டிராய்டு ஒரு சகாப்தம்

Sunday 17 March 2013  at March 17, 2013;
ஆண்டிராய்டு - கடந்த 4 வருடங்களுக்கு முன் வந்த முதல் போனில் இருந்து இன்று வரை இதன் வளர்ச்சியை பார்த்து கொண்டிருக்கிறேன். தற்சமயம் இது ஜெல்லிபீனில் நிற்கிறது. இந்த OS ஐ பயன்படுத்தும் சாதனங்கள் பல கோடி பேர்களால் விரும்பப்படுகிறது. பல புதிய முயற்சிகளை இது தொடங்கியிருக்கிறது. இந்த சகாப்தம் எல்லையில்லா வானம் போல் பல புதுமைகளை தொழில்துறையில் புகுத்திருக்கிறது. லட்சக்கணக்கான அப்ளிகேஷன்கள் உருவாக்கப்பட்டு சந்தைபடுத்தப்படும் ஒரு இயங்குதளம் அதனுடைய தொலைநோக்கு திட்டத்தில் வெற்றி பெற்றிருக்கிறதா? ஆம் என்றே சொல்லவேண்டும். 
அமெரிக்க ஆளுமை கொண்ட ஒரு கம்பெனி சிறிய மற்றும் கையடக்க சாதனங்களுக்கான இயங்குதளத்தின் மீது இருந்த மாயவலையை அறுத்திருக்கிறது. செல்போன் ஸ்மார்ட்போன் ஆன கதையில் தொடங்கிய தேடல் இப்பொழுது லேப்டாப் சாதனங்களையே குழி தோண்டிண்டிருக்கிறது என எண்ணும்போது, இதுவும் சாத்தியமோ? என நினைக்க தோன்றுகிறது. MS DOS கண்டிபிடிக்கப்பட்ட நாட்களில் நான் பிறந்திருக்கவில்லை ஆனாலும் கல்லூரியின் தொடக்க காலங்களில் கற்றிருக்கிறேன். அது வரையில் அது நீடித்தது Google தோன்றாதது ஒரு காரணமாக இருக்கலாம். கண்டுபிடிப்பை எல்லாம் காசாக்கும் குறுகிய நோக்கம் அன்றைய கார்ப்பரேட்டுகளின் எண்ணமாக இருந்து வந்தது. அதனால் அதை பயன்படுத்தும் பெரிய கம்பெனிகளை தாண்டி அது சாமானியர்களை சேரவில்லை. இன்றும் அது தொடர்கிறது, ஆனால் இப்பொழுது வேறு வடிவில்.

சாப்ட்வேர் மீது தீராத காதல் உள்ளவர்கள் தங்களுக்கான ஹார்டுவேரை தாங்களே தயாரித்து கொள்ளவேண்டும் - இது ஆலன் கே சொன்னது. இதைதான் ஸ்டீவ் ஜாப்ஸ் தன்னுடைய iPhone வெளியீட்டு விழாவில் நினைவு கூர்ந்தார். அவர் சாப்ட்வேர் மீது தீராத காதல் கொண்டவர், தன்னுடைய ஆப்ரேட்டிங் சிஸ்டத்துக்கு ஹார்டுவேரையும் அவரே தயாரித்தார். கிளிக் வீலில் தொடங்கி டச் கெஸ்சர் வரை அவர் கண்டுபிடித்த ஹார்டுவேர் இன்டர்பேஸ் அனைத்தும் கோடிகளை வாரி வழங்கியது. உயர்குடி மக்களின் அந்தஸ்தாகி போனது அவருடைய கம்பெனியின் தயாரிப்புகள் அனைத்தும். விண்டோஸ் ஒரு பக்கம், ஆப்பிள் ஒரு பக்கம் முழுதாய் கல்லா கட்டினாலும் லினக்ஸ் மட்டும் எழுந்திருப்பதாய் தெரியவில்லை. லினக்ஸ் பெரிதாய் வரமுடியாததற்கு காரணம் அதை சார்ந்து சாப்ட்வேர் தயாரிப்பதற்கு முன்னனி நிறுவனங்கள் காட்டிய தயக்கமே எனலாம். இணையத்தின் விஸ்வருப வளர்ச்சி, இனைய மொழிகளுக்கான தேவைகள், அதனால் தோன்றிய புற்றீசல் போலான செர்வர் மொழிகள் அனைத்துக்கும் லினக்ஸ் தேவையாய் இருந்தது. அதோடு அங்கே நின்று போனது.

பல்லாண்டு கால ஆராய்ச்சி பலனாய் கண்டுபிடிக்கப்பட்ட டச் போன் ஆப்பிள் போன்களுக்கு மட்டுமே என்றும், அதனுடைய சோர்ஸ்கோட் அனைத்தும் க்லோஸ்டு சோர்ஸாகவே இருக்கும் என்ற அறிவிப்பு மற்ற தொலைபேசி கம்பெனிகளின் வயிற்றில் புளியை கறைக்க, அங்கே ஒரு நம்பிக்கை ஒளி கூகுளால் உருவானது. இதில் வியாபார நோக்கம் இருந்தாலும், தொலை நோக்கு சிந்தனையில் அது அடிபட்டுபோகிறது. மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கட்டமைப்பிற்கான ஒரு குழு கூகுளால் உருவாக்கப்பட்டது, ஆண்டிராய்டு நிறுவனத்தை ஏற்கனவே கூகுள் வாங்கியதால் அதன் தலைவர் ஆண்டி ரூபின் தலைமையில் ஆண்டிராய்டு OS ஐ தயாரிக்கும் வேலைகள் முழு மூச்சில் தொடங்கி இன்று இந்தளவுக்கு நிற்கிறது.

பத்து வருடங்களுக்கு ஒரு முறை ஏதோ ஒரு கண்டுபிடிப்பு விஸ்பரூப வளர்ச்சி எடுத்து அனைவரையும் அன்னாந்து பார்க்க வைக்கிறது. இம்முறை மொபைல் கம்பியூட்டிங். டெஸ்க்டாப் விஷயங்களில் இல்லாத ஒன்று பெரிதாக ஒன்றும் இதில் இல்லை ஒன்றை தவிர. அது டச் கெஸ்சர்!!! அதுவும் மல்டி டச் பின்ச் உடன். கைப்பேசி என்பது ஸ்மார்ட் போன் ஆகி இப்போது பேப்லெட்டில் வந்து நிற்கிறது.  ஆனந்த விகடனில் ஹாய் மதனில் ஒரு வாசகரின் கேள்விக்கு மதன் இப்படி பதில் அளித்திருந்தார். ' என்னதான் கம்பியூட்டரில் புத்தகம் வாசிக்க முடிந்தாலும், படுத்து கொண்டு புத்தகத்தை வாசிக்கும் வசதி அதில் இல்லையே என்று சொல்லியிருந்தார். இப்போது அதே பத்திரிக்கை அப்ளிகேஷன் வடிவில் டேப்ளட்டுகளில் படுத்து கொண்டு படிக்க முடிகிறது என்றால், மொபைல் கம்யூட்டிங் எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்று உணர முடிகிறதா?

எனக்கு ஒரு பலமான சந்தேகம் இடையில் ஏற்பட்டது, டெஸ்க்டாப் கம்பியூட்டர்களுக்கான அப்ளிகேஷன்கள் தயாரிப்பு என்பது Cloud கம்பியூட்டிங் மூலமாக காலவாதியாக இருக்கும் நிலையில், க்ரோமியம் OS என்ற  Browser அடிப்படையில் இயங்கும் நோட்பேட்கள் சந்தையில் புதிதாய் அறிமுகப்படுத்தும் காலகட்டத்தில், மீண்டும் அப்ளிகேஷன் டெவலப்மெண்ட் என்பது? லாஜிக் எங்கோ உதைக்கிறதே என்று ஒரு ஐயம் ஏற்பட்டது. அதற்கான விளக்கம் ஒரு நண்பர் மூலமாக உடனடியாக கிடைத்தது. அப்ளிகேஷன்கள் லட்சக்கணக்கில் இருக்க காரணம் மொபைலிட்டி என்பது ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும், நவீன கால கட்டத்தில் வியாபார நிறுவனங்கள் தங்களுடைய சேவைகளை அப்ளிகேஷன்கள் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு வழங்க தொடங்கியிருக்கிறது, அதோடு மட்டுமின்றி Field work செய்யும் அத்துனை நிறுவனங்களும் தங்கள் கம்பெனியின் அப்ளிகேஷன்கள் மூலமாக இன்று பேப்பரை ஒழித்திருப்பதில் பொபைல் அப்ளிகேஷன்களுக்கு முக்கிய பங்கு உண்டு.

சரி ஒரு வழியாக ஆண்டிராய்டு அசுர வளர்ச்சி அடைந்துவிட்டது ஆனால் அதன் மூலம் ஹார்டுவேர் கம்பெனிகள் லாபம் அடைந்ததா என்றால், சொல்லவே தேவையில்லை கொள்ளை லாபம் பார்க்க தொடங்கிவிட்டார்கள். எப்படி இது சாத்தியம். ஆண்டிராய்டு ஸ்டாக் ரன் செய்வதற்கு இதுதான் ஹார்டுவேர் தேவை என்று கூகுளால் குறிப்பிட்டு சொல்லப்படவில்லை. மினிமம் ஹார்டுவேர் தேவைகளுடன் ஆண்டிராய்டின் பழைய வெர்ஷன்கள் இன்றும் ரன் ஆகி கொண்டிருக்கிறது. சைனாவின் மீடியா டெக் நிறுவனத்தின் RTOS கொண்டு இயங்கும் செல்போன்கள் இப்போது அவர்களின் லேட்டஸ்ட் MT6589 சிப் செட் மூலம் ஆண்டிராய்டின் லேட்டஸ்ட வெர்ஷனை லோட் செய்ய ஆரம்பித்திருப்பது அதிநவீன தொழில் நட்ப சேவைகளை வழங்கும் ஆண்டிராய்டு ஜெல்லிபீனை சாமானியர்களும் தொட்டு அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கியிருக்கிறது. 10,000 க்கு இனி நீங்கள் Quad core processor, 8 MP camera, 5 இன்ச் திரை, மல்டி டச், பின்ச் , வீடியோ கான்பிரன்சிங், லட்சத்திற்கும் மேற்பட்ட அப்ளிகேஷன்கள் அனுபவிக்கும் வாய்ப்பு உங்கள் வசமாகிறது என்றால் இது யாருடைய சாதனை? சந்தேகமே இல்லாமல் ஆண்டிராய்டால்தான்.

இன்றைய தேதியில் ஆண்டிராய்டின் ஆண்டி ரூபினுக்கு பதிலாக Chromium OS ஐ பார்த்துகொண்டிருந்த சுந்தர் பிச்சை ஆண்டிராய்டு தலைவர் பொறுப்பை கூடுதலாக பார்க்க தொடங்கியிருக்கிறார், இது குரோமியம் OS ஐ ஆண்டிராய்டுடன் இனைக்கும் புது முயற்சி என்று எல்லாராலும் நம்ப ப்படுகிறது. விளைவுகள் எப்படி இருக்கும்? ஆண்டிராய்டு அப்ளிகேஷன்கள் இனி குரோம்புக்கில் ரன் ஆகும். குரோம்புக்கின் இயங்குதளமாக, டெஸ்க்டாப் கம்பியூட்டர்களின் இயங்குதளமாக இனி ஆண்டிராய்டு இருக்கும். எப்படி வின்டோஸ் 8 மொபலைலிலும், டெக்ஸ்டாப் கம்யூட்டர்களிலும் ரன் ஆகிறோதோ அப்படி. ஆண்டிராய்டு இயங்குதளம் இனி மொபைல் கம்பியூட்டிங்கிலிருந்து டெஸ்க்டாப் மற்றும் க்ளொல் கம்பியூட்டிங்கிற்கும் அதனுடைய வேர்களை பரவ விட்டிருக்கிறது. இது என்ன மாதியான புரட்சி
ஏற்படுத்தும் என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

No comments:

Post a Comment