இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Sunday, 31 December 2017  at December 31, 2017;

இந்தாண்டு நல்லபடியாக முடிகிறது. 2017 ஐ பொருத்தவரை இந்த ஆண்டு நிறைவான ஆண்டு,  பல குறைகளை களைந்த ஆண்டு. ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வைத்திருக்கின்ற ஆண்டு. 2018 ஐ மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். நிறைய கனவுகள். நிறைய ஆசைகள். என் வாழ்வின் அடுத்த பத்தாண்டுகளை இந்த ஆண்டு தீர்மானிக்கும். ஏனெனில் சில கதவுகளின் சாவிகள், திறக்கபடவுள்ளன.

ஆண்டுகளுக்கான காலண்டரை மாற்றும்போது நமக்கும் வயதாகி கொண்டிருக்கிறது என்ற ஒரு தவிப்பு உண்டாவதை தவிர்க்கமுடியவில்லை. வயது ஏறிக்கொண்டு சென்றாலும் மனம் இன்னும் குழந்தைபோல தூகாலத்தில் இருப்பதினாலேயே
எதையும் எதிர்கொள்ளமுடிகிறது. இறைவன் அருள் நமக்கு எல்லாம் கிடைத்து இந்த 2018 ஆண்டு அனைவருடைய வாழ்வில்
மிகப்பெரிய வெற்றியை கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.

கடந்த ஆண்டு இந்த ப்ளாக்கை கூடுமானவரை அப்டேட் செய்ய எத்தனித்தபோதும் வேலைபளுவால் முடியவில்லை. இந்தாண்டும் இதே Resolution தான். முடிந்தவரை இந்த ப்ளாக்கரை காட்டுமன்னார்கோயில் domain வுடன் இனணக்கபார்க்கிறேன்.காட்டுமன்னார்கோயில் நண்பர்கள் நிறையபேர் இணையத்தளங்களையும், வலைப்பூவையும் அப்டேட் செய்வதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. காட்டுமன்னார்கோயில் இணைய நண்பர்கள் என்ற ஒரு குழுவை நாம் உருவாக்கி வருடத்தில் ஒருமுறை சந்திக்கவேண்டும் என்ற ஆசை உள்ளது. நான் நிரந்தரமாக சென்னையில் தங்கிவிட்டதால்
எனக்கு காட்டுமன்னார்கோயில் செய்திகள் அப்டேட் ஆவதில்லை. இருந்தும் என்னுடைய நினைவை என் ஊரை சுற்றியே இருக்கும்.

அடுத்தடுத்து வரும் அப்டேட்களில் என்னுடைய நிலைப்பாட்டை அறிவிக்கிறேன். என்னுடைய ப்ளாக்கை தொடர்ந்து வாசித்து ஆதரவளித்துவரும் என்னுடைய நண்பர்கள், மன்னை சொந்தங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களுடன் இந்தாண்டை தொடங்குகிறேன்.

வாழ்த்துக்களுடன்,
காட்டுமன்னார்கோயில் முகமதுகாமில். தா.

மழையை வரவேற்போம்

Sunday, 29 October 2017  at October 29, 2017;

கண்ணீர் அஞ்சலி - தியாகராஜன் சார்

Thursday, 7 September 2017  at September 07, 2017;
2012 ஜனவரி மாதத்தில் மடிப்பாக்கத்தில் எனக்கொரு அடைகலத்தை கொடுத்தவர். என் மாமாவின் நெருங்கிய நண்பரின் மாமனாராக எனக்கு அறிமுகம் செய்யப்பட்டவர். தன்னுடைய மருமகனின் மீதான அன்பின் காரணமாக எனக்கு தன்னுடைய வீட்டை கம்பெனி நடத்துவதற்கு அனுமதி அளித்தார். 
அதிமுகவின் கவுன்சிலர் ஆகும் அளவுக்கு மடிப்பாக்கம் பகுதியில் பிரபலமாக இருந்தவர். இதற்கு காரணம் அவர் வியாபாத்தில் கொடி கட்டி பறந்ததாகக்கூட இருக்கலாம். இந்த பகுதியில் அதிகமான கட்டிடங்களின் மரவேலைப்பாடுகள் இவர் கைவண்ணத்தில் உருவானவையே.
கிட்டதட்ட நான்கு வருடங்கள் அவர் வீட்டை கம்பெனி நடத்துவதற்கு மற்றும் தங்குவதற்கு கொடுத்த நல்ல மனதுகாரர். நான் அவருடைய வீட்டின் கீழ்தளத்தில் இருந்தவரை அவரின் அன்புக்கு பாத்திரமாக இருந்திருக்கிறேன். எந்த விஷயம் என்றாலும் என்னுடன் பகிர்ந்துகொள்ளும் வெள்ளந்தியான மனிதர். 
மூன்றாம் முறை ஹார்ட் அட்டாக் வந்தபோது அவரை மருத்துவமனை சென்று பார்த்தேன், சென்ற வாரம் நான்காம் அட்டாக் வந்தபோது அவரை உயிரற்ற சடலமாக பார்த்தபோது என்னை அறியாமலேயே துக்கம் தொண்டையை அடைத்தது. 
அவருடைய வீட்டில் இருந்து சென்றவர்கள் மிக நன்றாக வருவார்கள் என் நன்மறாயம் சொன்னவர்.  ஏனோ கம்பெனியை அண்ணாநகருக்கு மாற்றியபிறகு அவரை தனியே சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிட்டவே இல்லை. வழியில் செல்லும்போது ஒரு வணக்கம் வைப்பேன். புன்முறுவலுடன் ஏற்றுகொள்வார். சிறந்த பக்திமான். கொடைவள்ளல். 

காலவெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருந்த என்னை காபந்து செய்ய கரம் நீட்டியவர். வீடுகள் மாறினாலும் சென்னையின் மடிப்பாக்கத்தை என்னின் அடையாளமாக மற்றிய கலங்கரை விளக்கம். காலம் உங்களை மறந்தாலும் நான் மறவேன்!! உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்!!!

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Saturday, 31 December 2016  at December 31, 2016;

காட்டுமன்னார்கோயில் மக்களுக்கும், எனது தளத்தை தொடர்ந்து படித்துவரும் எனது அன்பு வாசகர்களுக்கும் இந்த தருணத்தில் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். 
2016 யில் சொற்ப எண்ணிக்கையில்தான் ப்ளாக் எழுத முடிந்தது. இந்த வருடம் அதிகப்படியான ப்ளாக்குளை எழுத நினைக்கிறேன். 
2016 எனக்கு மிக முக்கியமான வருடமாக இருந்தது. வியாபாரத்தில் இது எனக்கு ஒரு திருப்புமுனை ஆண்டு. 5 ஆண்டுகால எனது வியாபாரத்தை மேலும் பலமாக்கும்விதமாக சில நல்ல விஷயங்கள் 2016 யில் நடந்தது. இந்த நல்ல வாய்ப்பினை அளித்த இறைவனுக்கே புகழனைத்தும்.
இந்த ஆண்டு வியாபாரத்தில் விருத்தியை கொடுத்திருக்கிறது. சில கெட்ட விஷயங்களும் நடந்தேறியுள்ளது. பயம்படும்படி இல்லை அது அளவுக்கு நல்லது என நினைக்கிறேன். கனவு போல் இருந்திடகூடாதா  என நினைத்த சில விடியல்கள் அதுவாகவே ஆகிவிட இறைவனை தொழுகிறேன்.

வாழ்த்துக்களுடன்,
முகம்மது காமில் தா


ஜெ.ஜெ

Tuesday, 6 December 2016  at December 06, 2016;
தீவிரமான திமுக அனுதாபியாக இருந்தாலும், திரு செல்வி. ஜெ.ஜெயலலிதா மீது எப்பொழுதும் மரியாதையும், அன்பும் உண்டு. தனித்து விடப்பட்டபோதும் கால ஓட்டத்தில் காணாமல் போகாமல், தனக்கான ஒரு அங்கீகாரத்தை உருவாக்கிகொண்ட உண்மையான இரும்புபெண்மனி. இவரைபோல் இனி ஒரு பெண் இனி தமிழ்நாட்டை ஆள்வார் என்பது சாத்தியமே இல்லை.

ஜெ.ஜெ வில் தொடங்கி ஜெ.ஜெ வில் முடிகிறது, ஒரு பெண்ணிணத்தின் நம்பிக்கை.

சென்னை உணவகங்கள் - பகுதி 1

Saturday, 3 December 2016  at December 03, 2016;
சில வருடங்களுக்கு முன்பு சூளைமேட்டில் அமைந்துள்ள ஒரு fastfood நிறுவனத்திற்கு நண்பர் ஒருவர் அழைத்துபோனார். அந்த பாஸ்ட்புட் கடை ஓனர் எனது நண்பருக்கு நீண்டகாலமாக தெரியும் என்பதால் வாசலுக்கே வந்து அழைத்தவர் உள்ளே உட்காருவதற்கு டேபிளையும் அடையாளம் காட்டி அமரவைத்தார். என்னடா இது வரவேற்பு தடபுடலாக இருக்கிறதே என்று வியந்துதான் போனேன். நண்பர் பெருமையாக இதை சொல்லிகொண்டார்.


என்ன ஆர்டர் வேண்டும் என்று கேட்ட முதலாளியிடம், முதலில் சிக்கன் சூப் வேண்டும் என்று சொல்லி காத்திருந்தோம். சிக்கன் சூப் ரெடி என்று சுடசுட சர்வர் எங்களுக்கு பரிமாறினார். நன்றாக கலக்கி ஒரு ஸ்பூன் எடுத்து குடித்தவுடன் எனது மூளைக்கு ஏதோ உறைத்தது. இது நார்மலான சிக்கன் சூப் இல்லையே ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று பொறிதட்டியது. உடனே எனது நண்பரை அண்ணாந்து பார்த்தேன். அவருக்கும் ஏதோ வித்தியாசம் தெரிந்திருக்கிறது போல, அவரும் என்னை பார்த்தார். சார், சூப் ஏதோ டிப்ரண்டா இருக்கே என்றேன்..அவரும் ஆமாம்பா ஏதோ வித்தியாசமாகத்தான் இருக்கிறது என்றார். சார், சிக்கன், மட்டன் டேஸ்ட் எப்படி இருக்கும் என்று எனக்கு நன்றாக தெரியும், வாரத்திற்கு இரண்டு நாட்கள் சாப்பிடும் ஆள் நான் அதனால் நான் உறுதியாக சொல்கிறேன் இது கெட்டுபோன சிக்கன்தான். ஆமாம்பா நானும் அப்படிதான் நினைக்கிறேன் என்றவர். இப்பொழுது என்ன செய்யலாம் என்றார்.


நாங்கள் இருவரும் சன்ன குரலில் பேசுவதை தொலைவில் இருந்து பார்த்துகொண்டிருந்த முதலாளி அதாவது நண்பரின் நண்பர், என்ன சார் ஏதாவது பிரச்சனையா என்றார். அது ஒன்னுமில்லைங்க சிக்கன் கொஞ்சம் டேஸ்ட் டிப்ரண்டாக இருக்கே என பேசிக்கொண்டிருந்தோம் என்றார். அப்படியா சார், அதுக்கு ஏன் தயக்கம், ஏன்கிட்ட சொல்லி இருகலாமில்ல என்றவர், வேற சிக்கன் சூப் சொல்றேன் என்று கடை ஊழியரிடம் வேறு சூப் கொண்டுவர சொன்னார்.


அடுத்த சூப் வந்தது. இம்முறை எச்சரிக்கை உணர்வுடன் ஸ்பூனை வாயின் அருகே கொண்டு சென்றபோது, மூக்கு அதனுடைய வேலையை செய்தது, ஆம், வாசம் நுகர்ந்தேன். ஆகா என்ன அருமையான வாசனை மூக்கை துளைக்கிறதே என்று மெல்ல குடித்தேன். அருமையப்பா அருமை. இதுவல்லவோ சூப் என்று நண்பரை அண்ணாந்து பார்தேன். அவருடைய முகத்தில் மெல்லிய சிரிப்பு.


நண்பரின் நண்பர் ஒரு ஹோட்டலின் முதலாளி அவர் தன்னுடைய நண்பருக்கே கெட்டுபோன சிக்கன் சூப் கொடுக்கிறார் என்றால் சாமானியன் நிலை என்ன என்று நினைத்தேன். ஹா, சென்னை உணவகங்கள் பற்றிய என்னுடைய அனுமானத்தில் ஒரு பெரும் கரும்புள்ளி விழுந்த தினம் அது. பச்சை மரத்தில் அடிக்கப்பட்ட ஆணிபோல் அது இன்றும் உணவகங்களை சந்தேகிக்கிறது. உணவகங்களின் நிலையை zomoto வில் ஆராய்கிறது. சிக்கன் ப்ரை ரைஸ் கேட்டால் சிக்கனை தவிர்த்து அதனுடைய தோலை கள்ளமாவு தடவி கறிபோல் ஆக்கி முன்கூட்டியே ப்ரை செய்து, ரைஸில் கலக்கி கொடுக்கும் கடைகளை சந்தேகிக்கிறது.


ஓகே. இதற்கு ஏன் இந்த பில்டப்பு இது நார்மலாக நடக்கும் விஷயம்தானே நீங்கள் கடந்து போவதை போல்தான் நானும் கடந்துபோனேன். ஆனால் அன்று ஆரம்பித்த விஷயம் இன்றுவரை தொடர்கிறதே என நினைக்கும்போது, சென்னை உணவகங்கள் தங்களை ஒரு முறை சுயபரிசோதனை செய்யவேண்டிய நேரம் இது என்று எண்ணதோன்றியது. இலைமறை காயாக இருந்த விஷயங்கள் இன்று அப்பட்டமாக நடக்கும்போது நெஞ்சு பொறுக்கதில்லையே. அதனால்தான் இந்த கட்டுரை எழுதலாம் என்று முன்வந்தேன். இதன் கட்டுரையின் முதல் பகுதி இது. ஒரு முன்னோட்டம் என்று கூட இதை நீங்கள் நினைத்து கொள்ளுங்கள். அடுத்த பகுதியில் கொஞ்சம் விலாவாரியாக அலசுவோம்.

திரு. மணிரத்தினம் அவர்களுக்கு...

Thursday, 21 April 2016  at April 21, 2016;

திமுக, காங்கிரஸ் கூட்டணி சார்பாக காட்டுமன்னார்கோயில் தொகுதியில் போட்டியிடும் திரு. K.I. மணிரத்தினம் அவர்கள் படித்தவர், பண்பாளர், உழைப்பால் உயர்ந்தவர். அனுக்கிரகா constructions மூலம் பொருளீட்டி,  தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்திருக்கலாம் ஆனால் அவர் அந்த குறுகிய வட்டத்தில் இருந்து வெளிவந்து காட்டுமன்னார்கோயில் மக்களுக்கு பல உதவிகளை தன் சொந்த பணத்தில் செய்து வருகிறார். இது ஏதோ இன்றோ, நேற்றோ செய்து வருவது அல்ல பல ஆண்டுகளாக இதை தொடர்ந்து செய்து வருகிறார்.

காட்டுமன்னார்கோயிலுக்கு என்ன தேவை என்பது இங்கு பிறந்து வளர்ந்த ஒருவரால் மட்டுமே புரிந்து கொள்ளமுடியும். அத்தோடு தன் ஈட்டிய செல்வத்திலே ஒரு பங்கை ஏழைகளுக்கு செலவழிக்க முன்வருபவர், ஒரு அரசின் அங்கீகாரம் கிடைத்தால் இன்னும் நல்லது செய்வார் என்பது தின்னம்.

திரு.மணிரத்தினம் அவர்களிடம் நான் பேசியது கிடையாது, அதனால் அவரின் தேர்தல் வாக்குறுதிகளை கேட்க விரும்புகிறேன். இந்த 5 வருடம் அவருக்கான உறுதியான வாய்ப்பு என்பது அவர் காட்டுமன்னார்கோயில் மக்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகளே!! இதோ அவரின் Facebook பக்கம் https://www.facebook.com/Dr-kIManirathinam-779206098862707/ இதன்மூலம் அவர் தான் கொடுக்கவிரும்பும் வாக்குறுதிகளை பதிவுசெய்தால், நான் இங்கு அதை பிரசுரம் செய்ய தயார்.

ஒரு MLA வுக்கான அதிகாரம் என்ன என்பது எங்களுக்கு தெரியாது ஆனால் ஒரு MLA நினைத்தால் என்னவெல்லாம் செய்யலாம் என்பது எங்களுக்கு தெரியும். இதோ சில வருடங்களுக்கு முன்பு நாட் டிவிட் செய்ய சில கோரிக்கைகள்.
இன்னும் சில;

1. பாதாள சாக்கடை திட்டம் சாத்தியமா? பல்கி பெருகும் குடியிருப்புகள் மூலம் உருவாகும் சாக்கடையின் வடிகால் எது?. சாத்தியம் என்றால், அதை வடவாறு ஆற்றின் ஊடே கலக்காமல் கடலில் கலக்கக்கூடிய வகையில் திட்டங்கள் இருக்கின்றனவா?

2. காட்டுமன்னார்கோயிலின் முக்கிய சாலைகளை ஆக்கிரமித்து பாதசாரிகளுக்கு இடைஞ்சல்  கொடுக்கும் கடைகள் அகற்றப்படுமா?

3. வீராணம் ஏரியில் படகு குழாம் அமைத்து அதை சுற்றலா தளமாக ஆக்கும் திட்டம் உள்ளதா?

4. பேருந்து நிலையம் - வாழ்ந்து கெட்ட வீட்டின் சிதிலங்களை போல் உள்ள நம் பேருந்து நிலையம் மாற்றப்படுமா?

5. பேருந்து நிலையத்தில் கழிப்பறை வசதிகள் சொல்லக்கூடிய அளவில் இல்லை என்பது உண்மை. இவை சரிசெய்யப்படுமா?

6. பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள குளம் குப்பைகளின் கூடாரமாக இருக்கிறதே.. இதை சீர்செய்யமுடியுமா?

7. தனி ஒருவரின் குடும்பம் வாழ, அவர்கள் பொருள் ஈட்ட,  பன்றிகளை தெருவுக்கு தெரு உலாவ விட்டு வீட்டின் பின்புறத்தை பன்றிகளின் தொட்டிகளாக மாற்றி கொண்டிருப்பவர்களை அகற்ற முடியமா?

8. கிராமங்களில் இருந்து காட்டுமன்னார்கோயிலுக்கு வரும் பெண்மனிகள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள்  இயற்கை உபாதைகளுக்குகூட ஒதுங்க இடம் இல்லை. மன்னையின் முக்கிய வீதிகளில் இலவச அல்லது கட்டண கழிப்பறைகள் கட்ட முடியமா?

9. தொழிற்சாலைகள் (கெமிக்கல் அல்ல) கொண்டுவந்து நம் ஊர் சுற்றவட்டார மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க திட்டம் உள்ளதா?

10. பேருராட்சி நகராட்சியாக உயர்வு பெறுமா?

11. காட்டுமன்னார்கோயில்-சிதம்பரம், காட்டுமன்னார்கோயில்-சேத்தியாதோப்பு என இங்கிருந்து போகும் சாலைகள் புதிதாய் போடமுடியமா?

12. இரவு நேரங்களில் அதிகமாக நிகழும் விபத்துகளை தவிர்க்க வெளிப்புற சாலைகளின் இரு மருங்கிலும் reflector பொருத்தப்படுமா?

பிரபல வலைபதிவர் வா.மணிகண்டன் அவர்கள் எந்த கட்சியையும் சாராதவராக இருந்தாலும் அவர் கோபிச்செட்டிபாளையம் வேட்பாளரிடம் பெற்ற வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது. அட இது நல்லா இருக்கே என வேட்பாளர் வாக்குறுதிகளை படித்த போது அது கிட்டதட்ட எல்லாதொகுதிகளுக்கும் பொருந்துவதாக இருந்தது. அதனால் அதிலிருந்து சில.. திரு. மணிரத்தினம் அவர்களுக்கு.

13. கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் முறையாக அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுவதன் மூலமாக தொகுதியின் பிரச்சினை நீண்டகால நோக்கில் கட்டுப்படுத்தப்படும். இது சாத்தியமா?

14. தொகுதி மக்களின் பிரச்சினைகளை சட்டமன்றத்தில் முன்வைப்பதோடு நில்லாமல் குறைந்தபட்சமாக இரண்டு அல்லது மூன்று தீர்வுகளும் முன்வைக்கப்படும். இந்தத் தீர்வுகளும் பொதுமக்களின் ஆலோசனையோடு கண்டறியப்படும். இது முடியுமா?

15. இதுவரை அமைக்கப்படாத தொழில் வளாகம் (சிப்காட்) அமைக்கப்பட்டு உள்ளூரிலேயே வேலை வாய்ப்புகளைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்படும். தீர்வு காணப்படுமா?

16. நகரத்தில் போக்குவரத்து நெரிசலை சீர்படுத்தும் வகையில் மேம்பாலம் கட்டுவதற்கான பூர்வாங்கப் பணிகள் உடனடியாகத் தொடங்கப்படும். அதே போல, மக்களின் நீண்டகால கோரிக்கையான சுற்றுப்பாதை (ரிங் ரோடு) கொண்டுவருவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்படும். இதுபோல் சாத்தியமா?

17. புதிய பூங்காக்களும் குழந்தைகளுக்கான விளையாட்டுத் திடல்களும் அமைக்கப்படும். இது முடியமா?

18. தொகுதி முழுவதிலும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மிகச் சிறப்பான முறையில் தரம் உயர்த்தப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் சட்டமன்ற உறுப்பினரால் மேற்கொள்ளப்படும். இதை நீங்கள் செய்ய தயாரா?

19. அரசு மருத்துவமனையானது பெருநகர மருத்துவமனைகளுக்கு இணையாகத் தரம் உயர்த்தப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். நவீன உபகரணங்கள் வாங்குவதற்கும், உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவதற்கும் சட்டமன்ற உறுப்பினரின் நிதி முறையாகத் திட்டமிடப்பட்டுச் செலவு செய்யப்படும். இதை நிறைவேற்றுவீர்களா?

20. அரசுப் பொறியியல் கல்லூரி, அரசுக் கலைக்கல்லூரி மற்றும் அரசு பாலிடெக்னிக் ஆகியவற்றைக் கொண்டு வருவதற்காக சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். உங்களால் முடியமா?

21. உள்ளூரிலேயே இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கென கணினி பயிற்சி மற்றும் தொழில்நுட்பப் பயிற்சிகளுக்கான பயிற்சி நிறுவனங்கள் தொடங்கப்படும். சாத்தியமா?

22. ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றைப் பெறவும் அரசாங்கத்தின் உதவிகளைப் பெறுவதற்கான வேலைகளையும் சட்டமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் நியமிக்கப்படும் ஊழியரே செய்து தருவார். ஊழியரின் பணி சட்டமன்ற உறுப்பினரால் நேரடியாகக் கண்காணிக்கப்படும். இது சாத்தியமா?

23. தொகுதியில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்படும். வாரத்தில் ஒரு நாள் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினரை மக்கள் சந்திக்கவும் மீதமுள்ள நாட்களில் காட்டுமன்னார்கோயிலில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எம்.எல்.ஏவைச் சந்தித்து மக்கள் தங்களது குறைகளைத் தெரியப்படுத்துவதற்கும் வசதிகள் உருவாக்கித் தரப்படும். நீங்கள் இந்த வாக்குறுதியை தர தயாரா?

24. கடுமையான வரட்சியை சந்திக்கும் ஊராட்சிகளின் நீர்த் தேவையைக் களையும்படியான நிரந்தர குடிநீர்த் திட்டம் தொகுதி முழுவதும் படிப்படியாகச் செயல்படுத்தப்படும். இது சாத்தியமா?

சில உடனடி திட்டங்கள் நகர மக்களுக்காக ;

25. காலை மாலை என இருநேரமும் குடிநீர் வினியோகம்.

26. அசுத்தமான இடங்களில் வாரத்தின் இருநாட்கள் பிளீச்சிங் பவுடரை தெளித்தல்

27. HDFC, ICICI, Axis, TMB, KVB என தனியார் வங்கிகள் காட்டுமன்னார்கோயிலில் சேவை தொடங்குவதற்கு வழிகாட்டுதல்.

28. SBI பாங்கின் கூட்ட நெரிசலை தவிர்க்க Tiny SBI கொண்டு வருவதற்க்கு முயற்ச்சித்தல்.

29. சென்ட் பேக்டரி என்பது காட்டுமன்னார்கோயில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.

30. படித்து வேலை இல்லாமல் இருக்கும் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்துதல்.

31. பட்டதாரிகள் மற்றும் சுயதொழில் புரிவோர்க்கு அவர்களின் entrepreneur கனவை நனவாக்க மிகக் குறைந்த வட்டியில் கடன் கிடைக்க முயற்சி.

32. லால்பேட்டை மற்றும் சுற்றியுள்ள இஸ்லாமிய மக்கள் அடிக்கடி வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள சென்னை வருவார்கள், அவர்களுக்கு உதவும் பொருட்டு காட்டுமன்னார்கோயில்-லால்பேட்டை-கொள்ளுமேடு-ஆயங்குடி ஆகிய பகுதிகளில் இருந்து சென்னைக்கு சொகுசு பேருந்து.

33. வாரம் ஒரு முறை லால்பேட்டை அருகில் கூடும் சந்தைக்கு கட்டிடம்.

இன்னும் வரும்...

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்!!

Saturday, 26 March 2016  at March 26, 2016;


நன்றி தமிழக அரசு, பசுமை விகடன்.

Thursday, 30 October 2014  at October 30, 2014;
பசுமை விகடன் படித்துக்கொண்டிருந்தபோது கொள்ளிடத்திலிருந்து கடலில் கலக்கும் காவிரி நீரை சேமிக்க கதவணைகளை கட்ட தமிழக அரசு திட்டம் தீட்டியுள்ளதாகவும்,  இந்த திட்டத்தால் காட்டுமன்னார்கோயில் விளைநிலங்கள் நல்ல பாசனம் பெறும் என்றும் இருந்தது. அட! நல்ல விஷயமாச்சே இதை எப்படி படிக்க தவறினோம் என்று கட்டுரையை மேலும் படிக்க நேர்ந்தபோது இந்த திட்டத்திற்காக நீண்ட நாட்களாக போராடி வந்த பொதுப்பணித்துரை பொறியாளர் நடராஜன், வினாயகமூர்த்தி, கண்ணன்பிள்ளை, இளங்கீரன் ஆகியோரது பங்கும் அதிகமானது என அறியமுடிகிறது.

இது ஒரு நல்ல விஷயம். இதை நான் மனமார வரவேற்கிறேன். இந்த தருணத்தில் தமிழக அரசுக்கும், பசுமை விகடனுக்கும், நடராஜன், வினாயகமூர்த்தி, கண்ணன்பிள்ளை, இளங்கீரன் ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றியை காட்டுமன்னார்கோயில் மக்கள் சார்பாக தெரிவித்துகொள்கிறேன்.

அந்த வார பசுமை விகடனில் வந்துள்ள செய்தியையும், அதற்கு முன்னர் வந்த செய்தியையும் அப்பொழுதே இங்கே பதிவிட்டு இருக்கலாம் ஆனால் அது விகடன் காப்பிரைட்ஸ்க்கு எதிரானது என்பதால் என்னால் இந்த செய்தியை பதிவிடமுடியவில்லை. அதன்பிறகு விகடனிடம் எழுத்துபூர்வமான அனுமதி வாங்கியபிறகே, இதை வெளியிடுகிறேன். நன்றி விகடன்டாக்டர் சம்பத் - கண்ணீர் அஞ்சலி

Sunday, 27 April 2014  at April 27, 2014;
டாக்டர் சம்பத் - காட்டுமன்னார்கோயிலில் இந்த பெயரை உச்சரிக்காத ஆளே இல்லை எனலாம். அய்யங்கார் சமுதாயத்தில் பிறந்து MBBS மருத்துவ பட்டம் பெற்று தன் ஆயுள் முழுவதையும் எளிய ஏழை மக்களின் சேவைக்காக அர்பணித்த மாபெரும் மனிதர். தேர்தல் முடிந்த அடுத்த நாள் டாக்டர் அவர்கள் காலமானார் என்ற செய்தி காட்டுமன்னார்கோயிலையே உலுக்கிவிட்டது. 
எதிர்காலத்தில் என்னவாக வேண்டும் என்று மாணவர் பருவத்தில் கேட்கப்படும் கேள்விக்கு மருத்துவர் ஆக வேண்டும் என்ற பதில்கள் வருவது இவரை ரோல் மாடலாக நினைத்து கொண்டுதான். காய்ச்சலுக்கு கூட சென்னையிலிருந்து ஊருக்கு வந்து டாக்டர் அவர்களிடம் காட்டினால்தான் எனக்கு சரிப்பட்டு வரும். எங்கிருந்தாலும் மருத்துவம் ஒன்றுதான் ஆனால் நோய்களை diagnose செய்வதில்தான் சூட்சமமே உள்ளது. பெரிய லேப் வசதிகள் இல்லாவிட்டாலும் நோயின் தன்மை அதனுடைய வெளிப்பாடு கொண்டு அதை சரியாக ஜட்ஜ் செய்வதில் இவர் கில்லாடி. தன்னுடைய ஆயுளில் இவர் கைப்பட்டு சரியானவர்கள் லட்சோப லட்சம் பேர். ஈடுசெய்ய முடியாத இழப்பு என்பதை அவர் இறந்த அன்று அவர் வீட்டில் கூடி அழுத ஏழை எளிய மக்களின் வருகையே உணர்த்தியது. 
Family doctor என்று பெருமையாக சொல்லிகொள்வேன். கடைசியாக அவரை சந்தித்தபோது சென்னைக்கு வந்தால் மடிப்பாக்கத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தேன். புன்னகையை பதிலாக தந்தார். என்னை எல்லாம் குழந்தையிலிருந்து பார்ப்பவர். உடம்பு சரியில்லை என்று சென்றால், சென்னையிலிருந்து எப்பொழுது வந்தாய் என்று நலம் விசாரிப்பார். அவருடைய உடலுக்கு மாலையை வைத்தபோது கண்கள் கலங்கியது. 
'நம்ம ஊர்காரங்க சென்னைக்கு போனாலும் உடம்பு சரியில்லைன்னா இங்கதான் வராங்க' என்று அவர் உதிர்த்த வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் அல்ல சத்தியமான உண்மை. 
ஒரு குடும்பத்தில் ஒருவர் இறந்து அவர் குடும்பம் அழுதால் அவர் நல்ல குடும்ப தலைவன். அவருக்காக உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் அழுதால் அவர் நல்ல மனிதர். ஒரு ஊரே கண்ணீர் விட்டால் அவர் மாபெரும் மனிதர். 
நீங்கள் ஒரு மாபெரும் மனிதர். நீங்கள் மன்னை விட்டு நீங்கினாலும் மன்னை மாநகர மக்களின் மனதை விட்டு நீங்க மாட்டீர்கள்.