இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Wednesday 1 January 2020  at January 01, 2020;

எவரெஸ்டில் ஏறுவதுபோல் இருக்கிறது
ஒவ்வொரு ஆண்டையும் கடப்பது.
கித்னா கிலோமீட்டர் பையா என கேட்கும்போதெல்லாம்
தோ தோ என காலம் போய்கொண்டே இருக்கிறது.
சில நேரங்களில் நாம் போய்கொண்டிருக்கும்
திசை சரியா என எனக்கே சந்தேகம் வந்துவிடுகிறது.
இந்த திசையையும் கருவியையும் ஏனோ
கர்ணனின் கவசகுண்டலம்போல் பிறந்ததிலிருந்தே
சுமப்பதுபோல் இருக்கிறது எனக்கு.
நாம் உச்சியை நோக்கி பயணிக்கும்போது
கடந்துவந்த பாதையை பார்த்தால் நமக்கு
மயக்கம் வரும் என்பதனால் எனக்கு
பின்னால் என்ன நடக்கிறது என்பதைகூட
பார்க்காமல் நடக்கும் கருமமே கண்ணாயிரம்போல்
இருந்ததால் நிறையபேரை இழந்திருக்கிறேன்.
உச்சியில் எனக்கான உலகம் இருக்கிறது என
கனவு காண்கிறேன் அதில் வாழ்கிறேன்.
அதையே எனக்கான வாழ்க்கை ஆக்கிகொண்டேன்.
சறுக்கல்கள் என்பது சாதாரண விஷயம்தான்
உச்சியை நெருங்கும்வரை.
பல சறுக்கல்கள் மூலம் அடிவாரம் தொட்டு
அதிலிருந்து மீண்டு மீண்டும் உச்சியை நோக்கி
பயணிப்பவர்களுக்கு அதுவும் ஒரு சுவாரசியம்தான்.
இந்த தேடல் மட்டும் இல்லையெனில்
நான் நானாக இருக்கமுடியாது.
இந்த விளையாட்டை ஆராதிக்கிறேன்
அணுஅணுவாய் அனுபவிக்கிறேன்.
இந்த ஆண்டு நிறைய சறுக்கல்கள்
ஆனால் அதைவிட நிறைய சந்தோஷம்.
கல் என நம்பி நாம் பிடிக்கப்போய்
அது விஷ ஜந்தவாய் மாறியதெல்லாம்
நல்ல அனுபவம்.
இதுதான் பக்குவம் எனில் இந்த
புண்ணாக்கு பக்கவத்தை நான் அடையவே தேவையில்லை.
இன்றும் என் மனம் ஒரு குழந்தைபோலவே இருக்கிறது
20 ஆண்டுகளுக்கு முன்னர் நான் எப்படி இருந்தேனோ
அதே அன்பும் பேச்சும் அப்படியே இருக்கிறது.
யாருக்காகவும் எதற்காகவும் என் சுபாவத்தை மாற்றிகொள்ளாதவன்
கடந்துபோகும் ஆண்டுகளுக்கா மாற்றிவிட போகிறேன்.
ஸ்டீபன் ஸ்பீர்க்பெர்க் கிழவனாய் ஊன்றி நடந்தாலும்
அவன் மனம் இன்னும் ஜூராசிக் பார்கில் சுற்றுவதுபோல்
மனதை இளமையாய் வைத்திருக்கிறேன்.
இந்த 2020 வில் இந்தியா வல்லரசு ஆகும் என
கனவை கண்ட ஐயா அப்துல் கலாம் போல்
நானும் இந்த ஆண்டில் புது உச்சியை தொட்டுவிடலாம்
என்று நினைக்கிறேன்.
இறைவன் அருளட்டும்.
நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment