2022 - இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Friday 31 December 2021  at December 31, 2021;


 

கடைசி ஒரு மணி நேரம் போதுமா என்னுடைய ஒரு வருட அனுபவத்தை சொல்ல, நிச்சயமாக முடியாது. உப்பு விக்கபோனா மழை பெய்யுது, பொரி விக்க போனா சூறாவளியே அடிக்குது. இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ எனக்கு கன கச்சிதமாக பொறுந்துகிறது. மண்டையை கசக்கி ஒரு புது விஷயத்தை ஆரம்பிக்கலாம் என மார்ச் மாதம் நினைத்தால் இரண்டாம் அலை மீண்டும் பழைய நிலைக்கு திருப்பி தூக்கி அடித்துவிட்டது. என்னுடைய 40+ ஆண்டுகால வாழ்க்கையில் ஒரு தொற்று ஒரு மனிதனின் வாழ்க்கையில் இந்த ஆட்டம் ஆடுகிறது என்பதை பார்த்துகொண்டிருக்கிறேன். சில விஷயங்களை நாம் முயற்ச்சி செய்து பார்க்கலாம் அவ்வளவுதான். அதற்காக நாம் வருத்தப்பட்டு என்ன ஆகபோகிறது. 

இயற்க்கை மனிதனை எப்பொழுதும் கைவிடுவதில்லை. ஆம் மார்ச் மாதம் போன வாய்ப்பு செப்டம்பரில் தானாக கையில் வந்து விழுகிறது இதோ இந்த இந்த வருடத்தின் 4 உபயோகமனா மாதங்களை கடந்துவிட்டேன். மீதி 8 மாதம் என்ன செய்தாய் என்று கேட்கிறீர்களா? இந்த ஐடி துறை என்பது உலக பிஸினஸ். ஏதாவது வந்து நம்மை காப்பாற்றிவிடும். அது இறைவன் செயல். சர்வீஸ் பிஸினஸ் எனபதே கத்தியில் நடப்பதுதான். ரிஸ்க் இல்லாமல் வாழ்க்கை ஏது?

பிரமாண்ட மாற்றங்கள் ஏதும் இல்லை. கொரானாவின் இரண்டாவது அலையில் தப்பி ஓடுவதிலேயே நாம் குறியாக இருந்ததால் பிஸினஸ் இரண்டாவதுதான். இதோ இப்பொழுது மீண்டும் ஒரு அலை வருமா வராதா என குழப்பம் இருக்கிறது. மார்ச் மாதம் 2020 சென்னையின் வீட்டை விட்டு ஓடிய பயணம் இன்றும் நிற்க்வில்லை. ஓடினேன் ஓடினேன் சொந்தவீட்டிற்கும் சென்னையின் வாடகை விட்டிற்கும் இடையில் ஓடினேன். இந்த ஓட்டத்தை யாரால் தடுக்கமுடியும்? இந்த வாட்டத்தை யாரால் போக்கியிருக்க முடியும். நிச்சயமாக யாராலும் அல்ல ஏனெனில் அவரவர்கள் உயிரை காப்பாற்றிகொள்ள வீட்டில் அடைந்துகிடைந்தார்கள்.சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும். 

இன்ஜினியரிங்கில் சாதித்த விஷயங்கள் இந்த உலகம் ஏனோ மருத்துவதுறையில் சாதிக்கவில்லை. ஆம் ஒரு சிறு வைரஸ் இரண்டு ஆண்டுகாலம் இந்த உலகத்தை ஆட்டி படைக்கிறது ஆனால் இன்னும் தீர்வு எட்டபடவில்லை என்பது மருத்துவதுறையின் மீதே நம்பிக்கை இழக்கவைக்கிறது. அதுசரி HIV க்கே மருந்து இன்னும் கண்டுபிடிக்கவில்லை பிறகு இதற்கு மட்டும் எப்படி அவ்வளவு சீக்கிரம் கண்டுபிடித்துவிடுவார்கள். டெஸ்லாவும், எடிசனும் மருத்துவதுறையில் பிறக்காமல் போய்விட்டார்கள். இன்றும் TB என்றால் தூர ஓடுகிறோம். டெங்கு என்றால் திக்கற்றுநிற்கிறோம். போன நூற்றாண்டின் தீர்க்கபடாத வியாதிகளே இதுவரை மனித சமுதாயத்தை மிரட்டிகொண்டிருக்கிறது. இந்த நூற்றாண்டின் புதிதாய் பிறந்திருக்கும் வியாதிகள் எப்பொழுது தீர்க்கப்டும். அடுத்த நூற்றாண்டிலா? ஒரு மெஷினும், மனித உடலும் ஒன்றா என நீங்கள் கேட்காலம், இல்லைதான் ஆனால் இன்ஜினியரிங் இன்றும் மருத்துவதுறைக்கு அதிநவீன சாதணங்களை வழங்கி கொண்டிருக்கிறது. இன்று வியாதிகள் கண்டுபிடிப்பது துரிதகதியில் நடக்கிறது. நான் உணர்ந்த ஒரு விஷயம், இந்த மருத்துவதுறைக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டும். அது வேறு யாரால் முடியும், சாட்சாத் Google ம் Apple ம் மட்டுமே இதை செய்யமுடியும். R&D க்கு பல பில்லியன் டாலர்செலவு செய்ய இந்த ஜாம்பவன்களால்தான் முடியும். Electronics மற்றும் இன்ஜினியரிங்கில்  தேவைக்கு அதிகமாகவே இந்த உலகம் தன்னிறைவு அடைத்துவிட்டது ஆனால் போன நூற்றாண்டின் இத்து போன வியாதிகளை கட்டி அழுதுகொண்டிருக்கும் இந்த உலகத்திற்கு Engineers யின் தேவை அதிகமாக இருக்கிறது. 

எதையோ எழுதபோய் இதை எழுதிவிட்டேன் காரணம் இரண்டு வருடங்கள் இதில் நாம் இழந்திருக்கிறோம். எத்தனையோ சொந்த பந்தங்களை இழுந்திருக்கிறோம், பல குடும்பங்கள் நடு தெருவிற்க்கு வந்துவிட்டன. இந்த கொரானா அதுவாக நீர்த்துபோய் சாதாரண சளி ஜலதோஷமாக மாறாதா என இந்த உலகம் எதிர்பார்க்கிறது. அதுவரை இந்த அலைவிளையாட்டை ஆடவேண்டியதுதான்.

எப்பொழுதும் ஒரு பிரமாண்ட கனவை சுமந்துகொண்டே ஒவ்வொரு வருடத்தையும் கடப்பேன். நான் கனவு என்றதாலோ என்னவோ அது கனவாகவே போய்விடும்போல. ஆனால் நம்பிக்கை என்ற ஒன்றை அந்த கனவு கொடுக்கிறது அதனால் அந்த கனவை நான் இன்றும் காண்கிறேன். இது தூங்கும்போது வரும் கனவு அல்ல, முழு விழிப்பில் இருக்கும்போதும் நம்மை தூங்கவிடாமல் செய்யும் கனவு. கனவு கைக்கூட இறைவனை பிராத்திக்கிறேன்.

இந்த வருடம் நீங்கள் மனதில் நினைத்த அத்தனை விஷயங்களும் நல்லபடியாக நடக்கும். அனைத்தும் கைக்கூடும். என்னுடைய அத்தனை நண்பர்கள், என் நலம் விரும்பிகள், இந்த வலைதளத்தின் வாசக சொந்தங்கள் என அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

நன்றி

தா.முகமது காமில்

No comments:

Post a Comment