உன்னுள் சரண் அடைந்தேன்

Wednesday, 8 September 2010  at September 08, 2010;
நான் தின்னையை பிடித்து நடந்தபோது
நீ என்னை பிடித்து நடந்தாய்.

நான் ஊன்றுகோலை பிடித்தபோது
நீ அதன் மறுபக்கத்தை பிடித்தாய்.

உனை கண்கலங்காமல் வைத்து காப்பாற்றுவேன்-என
நான் கொடுத்த வாக்குறுதியை
எப்படி நிறைவேற்றப்போகிறேன்.

பகட்டான பசுமையை தின்று விழுங்கியதில்
பற்கள் தன் பலத்தை இழந்துவிட்டது.
புல்வெளியோ இன்று தரைவெளியாகிவிட்டது.

அறிவு விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது
அதை தாங்கும் உடலோ ஒட்டிவிட்டது.

நீண்ட பயணத்தின் களைப்பு நிரந்தரமாகிவிட்டதோ
என மனம் பதைபதைக்கிறது.

கண்ணின் ஒளியும் நாவின் ஒலியும்
மங்கிகொண்டே வருகிறது.

உனை கண்கலங்காமல் வைத்து காப்பாற்றுவேன்-என
சொன்ன நானே கரையில் கரைந்துவிடுவேனோ
என பயப்படுகிறேன்.

வாசற்கதவை திறந்துவைத்தே தூங்குகிறேன்.
விளக்கை அணைக்காமலே தூங்குகிறேன்.
விடிந்த பின்னும் தூங்கிவிடுவேனோ
என பயப்படுகிறேன்.

சைகையிலேயே நீ புரிந்துகொள்கிறாய்
ஆனால் அதை செய்வதற்க்குகூட
கைகளுக்கு பலமில்லை

கண் அசைவுயிலேயே நீ தெரிந்துகொள்கிறாய்
ஆனால் என் கண்ணில் ஒளி இல்லை

உனை கண்கலங்காமல் வைத்து காப்பாற்றுவேன்-என
உன் தந்தையிடம் அளித்த வாக்குறுதி
பிசகிவிடுமோ என பயப்படுகிறேன்.

இதயத்தின் துடிப்பு குறைந்து கொண்டே வருகிறது.
மூளைக்கு செல்லும் ரத்தமும் குறைந்து கொண்டே வருகிறது.
உச்சி தலை குளிர்ந்து கொண்டே வருகிறது.
என் மூச்சுகாற்றின் வேகம் குறைந்து கொண்டே வருகிறது.

உன் கண்கலங்காமல் வைத்து காப்பாற்றுவேன்-என
உன் தாயிடம் சொன்ன வாக்குறுதி
பொய்யாகிவிடுமோ என பயப்படுகிறேன்.

காதோரம் வேதம் ஓதுகிறார்கள்
வாயோரம் தண்ணீர் ஊற்றுகிறார்கள்

உன் மிக அருகாமையின் மணம் என் நாசி வழியே
மூளையை எட்டுகிறது.
நீ சிந்திய கண்ணீர் திவளை என் தொண்டையை
நனைக்கிறது.
துக்கம் தொண்டையை அடைக்கிறது.

பெருங்குரலெடுத்து அழுகிறேன்
கண்ணீர் மட்டுமே வருகிறது.
உனை கடைசியாய் அரவணைக்க முயல்கிறேன்
அதுவே என் உடலின் கடைசி இயக்கமாகிறது.

மீளாதுயில் என்னை முழுமையாய் அடைகிறது

உனை கண்கலங்காமல் வைத்து காப்பாற்றுவேன்-என
உன் காதோரம் சொன்ன வாக்குறுதி
இப்படி காற்றில் கரைந்து விட்டதே
என கவலைபடாதே

காற்றில் கரைந்த நானே
உன் மூச்சுகாற்றாய் இருக்கும்போது.

உனை கண்கலங்காமல் வைத்து காப்பாற்றுவேன்-என
நான் சொன்ன வாக்குறுதியை
காப்பாற்றிவிட்டேன்.

நன்பரின் கவிதை தொகுப்பில் எனக்கு பிடித்த கவிதை-நன்றி தெய்வீகன்

No comments:

Post a Comment